திங்கள், 14 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 35


பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு

விளக்கம்

பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன் , குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

Description

There are trees that bear fruit without flowering.
Likewise there are men who help without asking.
There are seeds that do not grow even when sowed
Like the fools who do not heed even when told.

ஞாயிறு, 13 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 34


கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்

விளக்கம்

ஒருவன் கல்வி கற்கவில்லை என்றாலும், அவன் கையில் பொருள் இருந்தால் அவனுடன் எல்லாரும் சென்று உறவாடுவர். கையில் பணம் இல்லாதவனை வீட்டில் இருக்கும் மனைவியும் மதிக்க மாட்டாள், பெற்றெடுத்த தாயும் வேண்டாள். அவன் சொல்லும் வார்த்தை செல்லாது, சபையில் எடுபடாது.

Description

If one had wealth even though he is not learned,
That wealth makes him welcome by everyone
If poor, his wife and his mother will not want him
Even his words will not be accepted as truthful.

சனி, 12 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 33


வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்

விளக்கம்


பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது. கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும். அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது. மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்

Description

The arrow that pierces the skin of an elephant
cannot go through a bundle of soft cotton.
The rock that resists the thrust of a crow-bar,
gives way to the piercing roots of a soft tree.
(Why use harsh words when kind words can get results)



வெள்ளி, 11 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 32


ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து

விளக்கம்:

ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும். பூமியில் வாழும் மனிதர்களே இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள், நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.

Description

The wealth of a man rises and falls
Like the ground under a flowing river
So giving to charity when one is wealthy
Increases the worthiness of one’s life.

வியாழன், 10 ஜூன், 2021

                         அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 31


இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி

விளக்கம்

இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது. உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று, திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது. தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

Description

It is better to have a good tune when the poem is faulty
It is better to have good morals than belong to the upper class
It is better to be ill than having false bravery
It is better to stay single than have a disgraceful wife

புதன், 9 ஜூன், 2021

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 30


தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி

விளக்கம்

ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.

Description

Oh! King! A wrongdoer need not be punished
Even if the whole country wants it!
The wrongdoer cannot escape his sufferings
For his previous sins will decide his fate.

 

அவ்வையார் நூல்கள் (Avvaiyar Books)

நல்வழி (Nalvazhi)

வெண்பா : 29

                   மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

விளக்கம்

ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை, அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)

Description

When the tree is full of ripened fruits
Nobody invites the bats to feed on them
If one gives like a cow that gives milk to its calf
The whole world will arrive claiming kinship.

ஔவையார் பாடல்கள்

  ஔவையார் பாடல்கள் ஆத்தி சூடி 106. வேண்டி வினை செயேல் தெரிந்தே தீய செயல்களை செய்யாதே.   107. வைகறைத் ...